மனிதம்

chennai floods
அணி வகுத்துச் செல்லும்
எறும்புப் படையை அதிரடியாய்
மிதியாமல் தாண்டிச் செல்லல்
மனிதம்!

கல்லிடுக்கில் நீரின்றி
வாடும் பயிருக்கு நீர்
வார்த்தல் மனிதம் !
கல்வி மறுக்கப் பட்ட
கடை நிலை மாந்தருக்குத்
தம் பெரேனும் படிப்பித்தல்
மனிதம் !

காசுக்குச் சலாம் போடும்
காவலனையும்; மனிதனாய்
நடத்துதல் மனிதம் !
காசுக்காய் இல்லாமல்
மனிதருக்காய் ஒரு நாளில் ஒரு முறையேனும் உபகாரம்
செய்தல் மனிதம் !
அன்புக்காய் ஏங்கும் இதயத்தை
அடையாளம் கண்டு கொண்டு
உள்ளத்தில் ஊற்றெடுக்கும்
அன்பை வார்த்தல் மனிதம் !
ஆத்திரத்தில் அறிவிழந்து
வார்த்தைகளைக் கொட்டி விட்டு
அடடா என வருந்தும் அறிவிலிகளை மன்னித்தல் மனிதம் !
றைவனைத் தொழுகையில்
தன் சுற்றத்திற்கு மட்டுமின்றிப்
பரிதவிக்கும் பிற உயிர்களுக்கும் பிரார்த்தித்தல் மனிதம் !
நித்தம் நித்தம் காணும்
பிச்சைக் காரனுக்குப்
பத்துக் காசுடன்
புன்னகையும் ஈதல் மனிதம் !
சுமை பகிர ஓர் உயிரின்றிச்
சோகத்தில் தவிக்கும்
சக உயிருக்கு நேசக்கரம்
நீட்டல் மனிதம் !
புனிதமான மனிதத்தைப்
புவிதனிலே தேடித் தேடிப்
புரிந்து கொண்டதைப்
புரிந்து கொள்ளல் மனிதம் !
ஆயிரம் மனிதர்கள் மரிக்கலாம்
ஆனால்,
மனிதம் மரித்து விட்டால்
மனித வாழ்வில் பொருளில்லை!

சென்னைப் பெருமழையில்,
மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்ற நிஜம்
நிரூபணமாயிற்று!

7.12.15

Comments

Post a Comment