Rain in Chennai
மழைக்காலங்கள்
அறியா வயதின்
அழியா நினைவுகள்
ஈர நாட்களின் இன்றும் ஈரமான நினைவுகள்
மேகம் கருக்கையில் அம்மாவின் முகமும் கருக்கும்.
இடி இடிக்கையில் கலக்கம் கூடும்.
மழை தொடங்கிய பின்னோ
வீடே நீர்க்காடாகும்.
சோறு வடிக்க உதவா பாத்திரகள் நீர் பிடிக்க உதவும்.
நீர் ஒழுகா
கையகலத்தில் ஒண்டிக் கொள்ள
உடன்பிறப்புகளுடன்
அடிதடி சண்டை.
நா நனைக்கும்
கஞ்சியிலும் மண்ணள்ளிப் போடும்,
நனைந்த
சுள்ளியும், அடுப்பும்.
மழை வலுக்க
கழிவு நீரும் மழை நீருடன்
சங்கமமாகி அழையா விருந்தாக
குடிசைக்குள்
நுழையும் உரிமையுடன்.
அவை விட்டுச்
சென்ற வியாதிகள் உதவியுடன்
அகிலம்
விட்டுச் சென்ற தம்பிகள் இரண்டு,
தங்கைகள் இரண்டு.
ஒவ்வொரு
மழையும் விட்டுச் செல்லும்
தடங்கள் மறைய எடுக்கும் காலம் ஆறு மாசம்
அதற்குள், ஐயகோ, அடுத்த மழை.
இன்று கண்ணில் பட்டது ஒரு வரி –
‘மழையைப் பிடிக்காதவர்கள் யார்..’
எழுதியது
கல் வீட்டில் வசித்து
நெல் சோறு புசிக்கும்
சினிமாக்
கவிஞராயிருக்கும்.
Comments
Post a Comment